36 ஆண்டுகளின் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு வந்த மைக்கேல் ஜாக்சனின் அரிய ஓவியம் பிரான்சில் ஏலத்திற்கு
மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் நேரடியாகப் போஸ் கொடுத்து வரையப்பட்ட ஒரே உத்தியோகபூர்வ ஓவியமான ‘The Book’, 36 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளதுடன் நவம்பர் 26 ஆம் திகதி பிரான்சில் ஏலத்திற்கு வரவுள்ளது.
‘கிங் ஆஃப் பாப்’ எனப் போற்றப்படும் மறைந்த உலகப் புகழ்பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சனின் அரிய உருவப்படம், எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி பிரான்சில் ஏலத்திற்கு வரவுள்ளது.
1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓவியக் கலைஞர் பிரெட் லிவிங்ஸ்டன் ஸ்ட்ராங் வரைந்த ‘The Book’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஓவியம், மைக்கேல் ஜாக்சன் நேரடியாகப் போஸ் கொடுத்து வரையப்பட்ட ஒரேயொரு உத்தியோகபூர்வ உருவப்படம் எனக் கூறப்படுகிறது.
சிவப்பு ஜாக்கெட் அணிந்து, கைகளில் புத்தகத்துடன் அவர் அமர்ந்திருப்பது போன்று வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், அவரது சிந்தனைகள், ஓவியங்கள் மற்றும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1990 ஆம் ஆண்டு பெவர்லி ஹில்ஸில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஓவியம், சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய நாணய மதிப்பில் சுமார் 3 கோடி முதல் 5 கோடி ரூபா வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த அரிய கலைப்படைப்பு, மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் மற்றும் கலை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.