மாணவனுடன் 30 முறை பாலியல் உறவு கொண்ட இங்கிலாந்து ஆசிரியை கைது... அதிர்ச்சி தகவல்
மாணவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட 65 வயதான பிரித்தானிய முன்னாள் ஆசிரியை சாலி-ஆன் போவன், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் 1980களின் பிற்பகுதியில் ஆண்கள் பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 65 வயதான முன்னாள் இரசாயனவியல் ஆசிரியை சாலி-ஆன் போவன் (Sally-Anne Bowen), நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏழு அநாகரிகத் தாக்குதல் குற்றச்சாட்டுகளில் இவ்வாண்டு ஆரம்பத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு, ஹரோ கிரவுன் நீதிமன்றத்தில் (Harrow Crown Court) கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தண்டனை வழங்கப்படவிருந்தது.
தனது 20 வயதுகளில் வடக்கு லண்டனின் பின்ச்லியில் அமைந்துள்ள கிறிஸ்ட் கல்லூரியில் (Christ's College) பணியாற்றியபோது, 14 முதல் 15 வயதுடைய மாணவன் ஒருவனுடன் சுமார் 30 தடவைகள் பாலியல் உறவு கொண்டதாகவும், மற்றொரு மாணவனை முத்தமிட்டதாகவும் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போவன் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. ஹெமல் ஹெம்ப்ஸ்டெட்டில் உள்ள அவரது வீட்டில் அவர் இல்லாத நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் ஹாம்ப்ஷயர் பகுதியில் வைத்து அண்டைப் பிராந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சனிக்கிழமை (நவம்பர் 21) அக்ஸ்பிரிட்ஜ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டு திங்கட்கிழமை (நவம்பர் 23) மீண்டும் ஹரோ கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனைத் தீர்ப்புக்காக ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, போவனுடன் பல மாதங்களாகச் சுமார் 20 அல்லது 30 தடவைகள் பாலியல் உறவு கொண்டதாகவும், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரைத் தனது காதலியாகக் கருதியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் சாட்சியமளித்தார். தமது உறவு குறித்து யாரிடமும் கூறக்கூடாது என போவன் வலியுறுத்தியதால் அதனை இரகசியமாக வைத்திருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
மதிய உணவு நேரங்களில் உணவகமொன்றில் போவனுடன் நேரத்தைச் செலவிட்டதாகவும், சக மாணவர்களின் தூண்டுதலால் அவரை முத்தமிட்டதாகவும் இரண்டாவது மாணவன் சாட்சியமளித்துள்ளார். சட்ட காரணங்களுக்காகப் பாதிக்கப்பட்ட இருவரின் பெயர்களும் வெளியிடப்படவில்லை.
வகுப்பறையில் போவன் குட்டையான, இறுக்கமான ஆடைகளை அணிந்து மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகியதாகவும், பாலியல் விடயங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியதாகவும் முன்னாள் மாணவர் டோபியாஸ் ஒலிவர் சாட்சியமளித்தார். இரசாயனவியல் பாடத்திற்குப் பதிலாக வகுப்பறையில் பாலியல் நிலைகள் குறித்தே அவர் அதிகம் பேசியதாகவும் ஒலிவர் தெரிவித்தார்.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் புனையப்பட்டவை என மறுத்த போவன், மருத்துவக் காரணங்களால் தனக்குப் பாலியல் உறவு கடினமானதாகவும் வலியுடையதாகவும் இருந்ததாகக் கூறினார். தான் மாணவர்களுடன் நட்பாகவே பழகியதாகவும், மார்கரெட் தாட்சரைப் போல உடையணியப் போவதில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார்.