ஈரானில் காதலித்து கர்ப்பமான 19 வயது இளம் பெண் பெற்றோரால் கொடூரம்: ஆணவக் கொலைக்கு பலியான ஹெலியா பத்தாஹி

ஈரானில் காதலித்து கர்ப்பமடைந்த 19 வயது இளம் பெண் ஹெலியா பத்தாஹி, பெற்றோராலேயே மாத்திரைகள் கொடுக்கப்பட்டுத் தலையணையால் அமுக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.


ஈரானில் காதலித்து கர்ப்பமான 19 வயது இளம் பெண் பெற்றோரால் கொடூரம்: ஆணவக் கொலைக்கு பலியான ஹெலியா பத்தாஹி

மேற்கு ஈரானிய நகரமான சனந்தாஜ் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஹெலியா பத்தாஹி என்ற இளம் பெண், தனது காதலால் கர்ப்பமடைந்ததைத் தொடர்ந்து பெற்றோராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இளைஞரைக் காதலித்து இரண்டு மாத கர்ப்பமாகியிருந்த ஹெலியா பத்தாஹி, தனது வயிற்றில் வளரும் சிசு குறித்த தகவலை கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த அவரது பெற்றோரான வோரியா பத்தாஹி மற்றும் லைலா வெய்ஸ் ஆகியோர், தங்கள் மகள் மீது புகார் அளிப்பதற்காக கடந்த சனிக்கிழமை அன்று நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.

அதன்பின் நீதிமன்றத்திலிருந்து வீடு திரும்பியதும், பெற்றோர் தங்கள் மகளைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், சுமார் முப்பது வலிப்பு எதிர்ப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக விழுங்கச் செய்து அவரைக் கொல்ல முயன்றுள்ளனர்.

மாத்திரைகளை விழுங்கிய பிறகும் மகள் உயிருடன் இருப்பதை உணர்ந்த பெற்றோர், சிறிதும் இரக்கமின்றித் தலையணையால் அவரது முகத்தை அமுக்கி மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து பெற்றோர் இருவரையும் கைது செய்தனர். பொலிஸாரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, அவர்கள் தங்கள் மகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தக் கோரச் சம்பவம் ஒரு ஆணவக் கொலை என ஹெங்காவ் மற்றும் ஹானா ஆகிய மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஈரானில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் குறித்த தீவிர விவாதத்தை ஹெலியா பத்தாஹியின் மறைவு மீண்டும் எழுப்பியுள்ளதுடன், அங்கு ஒரு வார காலப்பகுதியில் இளம் பெண் ஒருவர் கொல்லப்படும் மூன்றாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க