எக்ஸ்பிரஸ் என்ட்ரி ஊடாக நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் ஆரம்பித்தது கனடா; 1,999 பேருக்கு அழைப்பு
கனடாவின் குடிவரவுத் திணைக்களம் எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதுடன், புதிய தெரிவுச் சுற்றில் மாகாண நியமனத் திட்டத்தின் கீழ் 1,999 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கனடாவில் நிரந்தர வதிவிடத்தை (Permanent Residence) பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படும் 'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' (Express Entry) திட்டத்தின் கீழ், புதிய விண்ணப்ப அழைப்புகளைக் கனேடிய அரசாங்கம் மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களம் (IRCC) கடந்த நவம்பர் 23 ஆம் திகதி நடத்திய புதிய தெரிவுச் சுற்றில் 1,999 பேருக்கு நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்புகளை (ITA) வழங்கியுள்ளது.
கடந்த நவம்பர் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த புதிய விரிவான தரவரிசை முறைமை (Comprehensive Ranking System - CRS) மாற்றங்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது எக்ஸ்பிரஸ் என்ட்ரி தெரிவு இதுவாகும். இந்தச் சுற்றில் தகுதி பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 673 CRS புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டியதுடன், 2026 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது எக்ஸ்பிரஸ் என்ட்ரி சுயவிவரத்தை உருவாக்கியிருக்க வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இம்முறை மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program - PNP) ஊடாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மாகாண அரசாங்கங்கள் தமது குறிப்பிட்ட திறன் மற்றும் பணியாளர் தேவைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்து பரிந்துரைக்கின்றன.
இவ்வாண்டில் (2026) இதுவரையான காலப்பகுதியில் எக்ஸ்பிரஸ் என்ட்ரி திட்டத்தின் ஊடாக மொத்தமாக 151,408 விண்ணப்ப அழைப்புகளைக் கனடா வழங்கியுள்ளது. இவற்றில் பிரெஞ்சு மொழித் தேர்ச்சி கொண்டவர்கள், கனேடியப் பணி அனுபவம் பெற்றவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், வர்த்தக முகாமையாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் உள்ளடங்குகின்றனர்.
புதிய விதிமுறைகளுக்கு அமைய, கனடாவில் அதிக ஊதியம் வழங்கப்படும் துறைகளில் பணியாற்றுவோருக்கு மேலதிக CRS புள்ளிகள் வழங்கப்படுவதுடன், கனேடியப் பணி அனுபவம் அல்லது தகுதியான வேலைவாய்ப்புச் சலுகை வைத்திருப்போருக்கும் மேலதிக புள்ளிகள் கிடைக்கின்றன. குறிப்பாக, முன்னர் நீக்கப்பட்டிருந்த வேலைவாய்ப்பு அடிப்படையிலான புள்ளிகள் திருத்தப்பட்ட வடிவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பல சந்தர்ப்பங்களில் தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீட்டு (LMIA) ஆவணம் இன்றியே விண்ணப்பதாரர்கள் மேலதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பணியாற்றி வருபவர்களுக்கும் நிரந்தர வதிவிடத்திற்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதுடன், திறமையான பணியாளர்களைக் கனடா தொடர்ந்தும் வரவேற்கும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.