இலங்கை இளைஞரின் மனிதநேய உதவி: ஐந்து மாதங்களுக்குப் பின்னர் தாயின் சிகிச்சைக்கு உதவிய பிரித்தானியப் பெண்
இலங்கையில் வழிதவறித் தவித்த பிரித்தானியப் பெண்ணுக்கு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவிய இளைஞரின் தாயாருக்கு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் அதே பெண் அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை வழங்கியதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் வழிதவறித் தவித்த பிரித்தானியப் பெண்ணொருவருக்கு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உதவிய இளைஞரின் தாயாருக்கு, ஐந்து மாதங்களுக்குப் பின்னர் அதே பெண் மருத்துவ நிதியுதவி வழங்கியதாக நெகிழ்ச்சியான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள கிராமமொன்றில் வசிக்கும் சமன் என்ற இளைஞரே இந்த உதவியைப் பெற்றுள்ளார்.
தந்தையின் திடீர் மறைவைத் தொடர்ந்து குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட சமன், தனது தாயாரின் மருத்துவச் செலவுகள் மற்றும் தங்கையின் கல்விச் செலவுகளைச் சமாளிப்பதற்காக நகருக்கு அருகில் சிறிய தேநீர்க் கடையொன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் இரவு சுமார் 9 மணியளவில் தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சமன், வீதியோரத்திலுள்ள மரமொன்றின் கீழ் மழையில் நனைந்தபடி தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரைக் கண்டுள்ளார்.
எமா என்ற குறித்த பிரித்தானியப் பெண், திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர் பயணித்த பேருந்து தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மாற்றுப் போக்குவரத்து வசதியைத் தேடிச் சென்ற அவர், வழிதவறி குறித்த கிராமத்தை வந்தடைந்துள்ளார். அவரது கையடக்கத் தொலைபேசியின் மின்கலமும் தீர்ந்திருந்ததால் எவருடனும் தொடர்புகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஆங்கில மொழியில் போதிய புலமை இல்லாதபோதிலும், குறித்த பெண்ணின் நிலைமையைப் புரிந்துகொண்ட சமன், தனது குடையின் கீழ் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமனின் தாயார், எமாவை அன்புடன் வரவேற்று உலர்ந்த ஆடைகள், சூடான தேநீர் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கி உபசரித்துள்ளார்.
மறுநாள் அதிகாலை எமாவை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்ற சமன், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பேருந்தில் அவரை ஏற்றிவிட்டுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட உதவிக்காக எமா பணம் வழங்க முற்பட்டபோதிலும், இலங்கைக்கு வருகை தந்த விருந்தினருக்கு உதவுவதற்காகப் பணம் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை எனக் கூறி சமன் அதனை மறுத்துள்ளார்.
எனினும், தனது பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி ஆகியவற்றை எழுதி சமனிடம் வழங்கிவிட்டு எமா அங்கிருந்து சென்றுள்ளார்.
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் சமனின் தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்த நிலையில், அதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாமல் சமன் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் பிற்பகல் வைத்தியசாலையில் தனது தாயாருடன் இருந்த சமனைச் சந்திப்பதற்காக எமா அங்கு வருகை தந்துள்ளார்.
பிரித்தானியாவுக்குத் திரும்பிய பின்னர், இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்ட சிறிய சமூக சேவை நிதியமொன்றை எமா ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தரின் உதவியுடன் சமனின் விபரங்களைத் தேடிக் கண்டறிந்த அவர், மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து, சமனின் தாயாரின் அறுவை சிகிச்சை மற்றும் வைத்தியசாலைச் செலவுகளுக்குத் தேவையான முழுத் தொகையையும் எமா வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
அத்துடன், சமன் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகத் தேயிலை நாற்றுகள், மரக்கறிச் செய்கைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் நிதியுதவிகளையும் வழங்கியுள்ளார்.
இலங்கையில் தனக்குக் கிடைத்த மனிதாபிமான உதவியை மறக்காமல், அதற்குப் பிரதியுபகாரமாக இந்த உதவிகளை வழங்கியதாக எமா தெரிவித்துள்ளார்.