கார்த்திக் சுப்பராஜின் ‘டொரோதி’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டொரோதி’ திரைப்படத்தை ஆழமான மற்றும் துணிச்சலான படைப்பு என இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வெளிவரவுள்ள ‘டொரோதி’ திரைப்படத்தைப் பாராட்டி, ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகவுள்ள நிலையில், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் அவர் தனது பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார்.
துணிச்சலான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படத்திற்கு ஒரு துணிச்சலான திரைப்பட இயக்குநரே தேவை என்று குறிப்பிட்டுள்ள அருண் மாதேஸ்வரன், மனதைத் தைக்கும் பயமற்ற கதையை உருவாக்கியமைக்காக கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், படத்தில் கார்த்தி மற்றும் சுப்பு ஆகிய கதாபாத்திரங்களில் நேர்மையுடனும் அப்பாவித்தனத்துடனும் நடித்து படத்தின் ஆன்மாவாகத் திகழும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரைக் குறித்துப் பெருமைப்படுவதாகவும், கீர்த்தி சுரேஷுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக கிராமமொன்றில் கடினமான சூழலில் வளரும் நெருங்கிய நண்பர்களான இருவரின் வாழ்க்கையில், அவர்கள் மீது பரிவு காட்டும் டொரோதி எனும் பெண்ணிற்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வும், அதனைத் தொடர்ந்து ஆணாதிக்கக் கட்டமைப்புகள் மற்றும் அன்றாட வன்முறைகளுக்கு மத்தியில் அவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்தமுமே இக்கதையின் பிரதான கருவாக அமைந்துள்ளது.
அண்மையில் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இத்திரைப்படம், பார்வையாளர்களின் எழுந்து நின்ற பாராட்டையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படம், கார்த்திக் சுப்பராஜுடன் அவர் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் படைப்பாகும்.
ஜோதி தேஷ்பாண்டே, குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ள ‘டொரோதி’ திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் உலகளவில் வெளியாகவுள்ளது.