சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை
நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் ஒரு வாரத்தைக் கடந்த நிலையில் உலகளவில் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம், தனது முதல் வார முடிவில் உலகளாவிய ரீதியில் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான இந்தத் திரைப்படத்தில், தெலுங்குத் திரையுலகில் ‘கலர் போட்டோ’ மற்றும் ‘ஹிட் 2’ போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற சுஹாஸ் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்துள்ளார்.
படம் வெளியான நாள் முதலே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வந்த நிலையில், நான்காம் நாளில் மிக உயர்ந்த வசூலைப் பதிவு செய்ததுடன், முதல் வாரம் முழுவதும் தொடர்ச்சியாக வசூலில் நல்ல முன்னேற்றத்தைக் காட்டி வந்துள்ளது.
திரைப்பட வசூல் விபரங்களைக் கண்காணிக்கும் ‘சாக்னில்க்’ (Sacnilk) தளத்தின் தகவல்களின்படி, இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 நாட்களைக் கடந்த நிலையில் இந்தியாவில் 57 கோடியே 30 இலட்சம் ரூபாயை வசூலித்துள்ளது.
மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர், கிரிஷ் ஹசன், ரவீந்திரா விஜய், பால சரவணன், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இருபது வருட நாடுகடத்தலுக்குப் பின்னர் தனது சொந்தக் கரையோரக் கிராமத்திற்குத் திரும்பும் முத்துக்காளி (சூரி), தனது நண்பனின் மகனைத் தன் பழைய தோழனான சட்டப்புலியிடமிருந்து (சுஹாஸ்) காப்பாற்றப் போராடும் கதைக் களத்தைக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.