4 வயது குழந்தை உட்பட 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்த மயக்க மருந்து நிபுணருக்கு ஆயுள் தண்டனை!
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் மிக வயது குறைந்தவர் 4 வயதுடைய குழந்தை ஒன்றாகும். 2016ஆம் ஆண்டு வழக்கமான டான்சில் அறுவைச் சிகிச்சையின் போது, அந்தக் குழந்தை இரண்டு முறை மாரடைப்புக்கு உள்ளானாலும் உயிர் பிழைத்தது.
30 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுத்த குற்றச்சாட்டில், 53 வயதுடைய முன்னாள் மயக்க மருந்து நிபுணரான பிரடெரிக் பெச்சியர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
கிழக்கு பிரான்ஸ் நாட்டின் பெசான்கான் நகரிலுள்ள நீதிமன்றம், இந்த வழக்கில் பெச்சியரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிப் பைகளில், மாரடைப்பு அல்லது கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய விஷப் பொருட்களை அவர் திட்டமிட்டு கலந்ததாக அரசு தரப்புக் குற்றம் சாட்டியது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் மிக வயது குறைந்தவர் 4 வயதுடைய குழந்தை ஒன்றாகும். 2016ஆம் ஆண்டு வழக்கமான டான்சில் அறுவைச் சிகிச்சையின் போது, அந்தக் குழந்தை இரண்டு முறை மாரடைப்புக்கு உள்ளானாலும் உயிர் பிழைத்தது. பாதிக்கப்பட்டவர்களில் மிக வயதான நபர் 89 வயதுடையவராவார்.
2008 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில், பெசான்கானில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றிய காலத்தில், நோயாளிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
முதலில் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்ட 36 வயதுடைய சாண்ட்ரா சிமார்ட் என்பவர், முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை நடைபெறும் போது திடீரென மாரடைப்புக்கு உள்ளானார். பின்னர் அவரது ஊசிப் பையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிக பொட்டாசியம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
15 வாரங்கள் நீடித்த விசாரணையின் போது, சில நோயாளிகள் விஷம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெச்சியர் ஒப்புக்கொண்ட போதிலும், தாம் குற்றம் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்தார். “நான் விஷம் கொடுப்பவன் அல்ல; நான் எப்போதும் உறுதிமொழியைப் பின்பற்றியுள்ளேன்” எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இத்தீர்ப்பின் படி, அவர் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளார். மேல்முறையீடு செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், அது மேற்கொள்ளப்பட்டால் ஒரு ஆண்டுக்குள் மீண்டும் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது.
Editorial Staff