வாட்ஸ்அப் ஊடாக 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மோசடி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது
வாட்ஸ்அப் ஊடாகப் பரிசுப் பொதி தருவதாகக் கூறி 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நுகேகொடைப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான பரிசுப் பொதி தருவதாகக் கூறி வாட்ஸ்அப் குழுவொன்றின் ஊடாக 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, நேற்று (30) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் நுகேகொடைப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணம் சந்தேகநபரின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடப்பட்டு இந்த நிதி மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.