நாடு தழுவிய திடீர் மின்தடை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் பூர்வாங்க விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின்தடை குறித்த பூர்வாங்க விசாரணை அறிக்கையைத் தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையைத் தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையின்படி, அன்றைய தினம் முற்பகல் 11:43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகில் விநியோகிக்கப்பட்டு வந்த 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார அமைப்பின் அதிர்வெண் (Frequency) வேகமாக 48.75 ஹெர்ட்ஸாகக் குறைவடைந்ததுடன், சம்பவம் ஆரம்பமாகி 4.1 செக்கன்களுக்குள் ஒட்டுமொத்த மின்சார கட்டமைப்பும் முடங்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார அதிர்வெண் குறையும் போது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் தானியங்கி மின் சுமை துண்டிப்பு முறையின் (UFLS) ஐந்து கட்டங்களும் உடனடியாகச் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது 449.2 மெகாவாட் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், இது மின் தடைக்கு முன்னர் பதிவான 1,135 மெகாவாட் ஒட்டுமொத்த உற்பத்தியில் 39.6 சதவீதமாகும். இருப்பினும், மின் கட்டமைப்பு முழுமையாகச் செயலிழப்பதைத் தடுக்க முடியவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நுரைச்சோலை உற்பத்தி அலகுகளுக்கு மேலதிகமாக விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ மற்றும் லக்ஸபான உள்ளிட்ட பல நீர்மின் நிலையங்களின் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயற்பட்டதால் அவற்றின் உற்பத்தி அலகுகளும் செயலற்ற நிலைக்குச் சென்றன. இதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட சீரமைப்புப் பணிகளின் ஊடாக, ஒட்டுமொத்தப் பரிமாற்ற கட்டமைப்பையும் (Transmission System) மீளமைக்க 5 மணி 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மாலை 4:58 மணியளவில் பிரதான உபமின் நிலையங்கள் அனைத்தும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மகாவலி, லக்ஸபான, சமனலவெவ அல்லது தெற்கு மற்றும் கொழும்பு ஆகிய நான்கு பிரதான கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மின் விநியோகம் மீள ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும், யுகதனவி மின் நிலையத்தின் துணை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனை மீளச் செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது உட்பட சில உற்பத்தி நிலையங்களில் தொழில்நுட்பச் சிக்கல்கள் பதிவாகியிருந்தன. அதேவேளை, நுரைச்சோலை மின் நிலையத்தின் முதலாவது அலகில் ஏற்பட்ட திடீர் துண்டிப்புக்கான துல்லியமான அடிப்படைக் காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், இது குறித்த விரிவான அறிக்கை பின்னர் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..