விஜய் அரசின் 8 கிராம் தங்கம்: ஆண்டுக்கு எத்தனை பேர் பெறுவார்கள்? - முழு விவரங்கள்!

Published on: 05 Aug 2026, 08:35 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் 'அண்ணன் சீர் திட்டம்' மூலம் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் அரசின் 8 கிராம் தங்கம்: ஆண்டுக்கு எத்தனை பேர் பெறுவார்கள்? - முழு விவரங்கள்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பெண்களை கவரும் வகையில் 'அண்ணன் சீர் திட்டம்', 'தாய்மாமன் மோதிரம் திட்டம்' உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமான அறிவிப்பான 'அண்ணன் சீர் திட்ட'த்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மரியா வில்சன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.812 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் எத்தனை பயனாளிகள் தங்க நாணயம் பெற முடியும் என்பதை பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

8 கிராம் தங்க நாணயம் - ஒரு சவரன்!

அண்ணன் சீர் திட்டத்தின் படி வழங்கப்படும் 8 கிராம் தங்க நாணயம் என்பது ஒரு சவரன் (பவுன்) ஆகும். அதாவது, ஒரு பவுன் தங்க நாணயம் ஒவ்வொரு தகுதியான பயனாளிக்கும் வழங்கப்பட உள்ளது.

பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கீடு:

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுவதாக கணக்கிடப்படுகிறது. மகளிர் உரிமை தொகை பெறும் குடும்பங்கள் மொத்தமாக 1.31 கோடி குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு முன்னுரிமை அளித்து அரசு தங்க நாணயம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 2.25 கோடி முதல் 2.27 கோடி ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் இருந்த நிலையில், 2026-ல் மொத்தக் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது. 2025 உடன் ஒப்பிடுகையில், 2026-ல் புதிய ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் புதிய தம்பதிகள் ரேஷன் கார்டு பெறுகிறார்கள்.

தகுதி நிபந்தனைகள்:

இந்த 2 லட்சம் தம்பதிகளில் 21 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு மட்டுமே 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தால், பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும். 21 வயதுக்குட்பட்ட மணப்பெண்கள் சுமார் 30% எனக் கணக்கிட்டால், 60,000 பேர் தகுதியை இழப்பார்கள். 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மணப்பெண்கள் 70% எனக் கணக்கிட்டால், 1,40,000 பேர் மட்டுமே தகுதி பெறுவார்கள். மகளிர் உரிமை தொகை போல், இதற்கும் 21 வயது நிபந்தனை விதிக்கப்படலாம். இது பெண் கல்வியை ஊக்குவிக்கவும், இளம் வயது திருமணங்களைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கும் என அரசு நியாயப்படுத்த வாய்ப்பு உள்ளது.

வருமான வரம்பு நிபந்தனை:

மேலும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்று அரசு நிபந்தனை வைத்தால், சுமார் 50,000 முதல் 55,000 பேர் தகுதி பெற மாட்டார்கள். இந்த இரண்டு நிபந்தனைகளையும் கழித்த பிறகு, இறுதியாக சுமார் 85,000 முதல் 90,000 பேர் மட்டுமே 8 கிராம் தங்க நாணயம் பெற தகுதி பெறுவார்கள்.

நிதிக் கணக்கீடு:

ஒரு பட்டுப்புடவையின் செலவு சுமார் ரூ.2,000 எனவும், 8 கிராம் தங்க நாணயத்தின் செலவு ரூ.85,000 முதல் ரூ.90,000 வரை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

85,000 பயனாளிகளுக்கு:

90,000 பயனாளிகளுக்கு:

அதிகபட்சமாக 93,333 பேருக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்க முடியும். சுமார் ஒரு லட்சம் பேர் என்ற இலக்குடன் அரசு இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருப்பதாகவே தெரிகிறது. தங்கம் விலை எதிர்காலத்தில் உயரும் பட்சத்தில், அரசு பட்டுப்புடவையின் டெண்டர் தொகையைக் குறைக்கவோ அல்லது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவோ வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW