ஒரே இளைஞரை திருமணம் செய்த 3 சகோதரிகள்: சொன்ன காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோகா மாவட்டத்தில் மூன்று சகோதரிகள் ஒரே இளைஞரை திருமணம் செய்ததாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண முடிவுக்கான காரணத்தை சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று சகோதரிகள் ஒரே இளைஞரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே நபரை வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.
தகவலின்படி, சமூக வலைதளங்களில் செயல்பட்டு வரும் சரோஜ் (20), சாவித்ரி (19), சந்தோஷி கடக்வன்ஷி (18) ஆகிய மூன்று சகோதரிகளும், கடந்த ஆறு மாதங்களாக தங்களுக்கு கேமராமேனாக பணியாற்றி வந்த விகாஸ் என்பவரை திருமணம் செய்துள்ளனர்.
அம்ரோகா பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மூன்று சகோதரிகளும் விகாஸை மணந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண சடங்குகளின் போது மூவரும் அக்னியைச் சுற்றி வலம் வந்ததாகவும், ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த திருமண நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, இந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
ஆரம்பத்தில் இது சமூக வலைதளங்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோ அல்லது விளம்பர முயற்சி என சிலர் கருதிய நிலையில், பின்னர் திருமணம் உண்மையாக நடைபெற்றதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சகோதரிகள் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, சிறு வயது முதலே மூவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததாகவும், பெற்றோர் தேர்வு செய்யும் வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டு பிரிந்து வாழ விரும்பாததால், அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வித்தியாசமான திருமணம் தொடர்பான தகவல் வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு என பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான சட்ட ரீதியான அம்சங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் குறித்து மேலும் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.