2 முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர்; பெண் கைதியின் மரண தண்டனை நிறைவேற்றம் நிறுத்தம்

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் 50 வயது பெண் கைதி கிறிஸ்டா பைக்கிற்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிரியாததால் மரண தண்டனை நிறைவேற்றம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.


2 முறை விஷ ஊசி செலுத்தியும் பிரியாத உயிர்; பெண் கைதியின் மரண தண்டனை நிறைவேற்றம் நிறுத்தம்

அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிரியாததால், தண்டனை நிறைவேற்றும் நடைமுறை பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்னஸி மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதான கிறிஸ்டா பைக் என்ற பெண், கடந்த 1995-ஆம் ஆண்டு தனது 18-வது வயதில் சக மாணவியான கொலீன் ஸ்லெம்மர் என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் அதனை உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிறை வளாகத்தில் உள்ள தண்டனை அறையில் கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

பொதுவாக விஷ ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில், கிறிஸ்டா பைக்கிற்கு ஊசி செலுத்தப்பட்டு மூன்று நிமிடங்கள் கழித்துத் திரை விலக்கிப் பார்க்கப்பட்டது. அப்போது அவர் உயிரிழக்காமல் குறட்டை ஒலி எழுப்பியவாறு இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடனடியாகத் திரை மூடப்பட்டு, அவருக்கு இரண்டாவது முறையாகவும் விஷ ஊசி செலுத்தப்பட்டது. எனினும், இரண்டாவது முறை ஊசி செலுத்தப்பட்டு சுமார் 40 நிமிடங்கள் வரை காத்திருந்தபோதும் அவரது உயிர் பிரியவில்லை.

மாறாக அவர் தொடர்ந்து சுவாசித்துக்கொண்டே இருந்ததால், தண்டனையைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கையை அதிகாரிகள் உடனடியாக நிறுத்தினர்.

தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பிற்காக கிறிஸ்டா பைக் அவசர ஊர்தி மூலம் சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

டென்னஸி மாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படாத சூழலில், கிறிஸ்டா பைக்கிற்குத் தண்டனை நிறைவேற்ற முயன்ற போது நிகழ்ந்த இந்த அரிதான மருத்துவப் பின்னடைவு தொடர்பாகச் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க