நிர்வாணமாக ஓடி கோவில் குளத்தில் விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி பலி.. நடந்தது என்ன?
தெலங்கானாவில் மன அழுத்தம் காரணமாக நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி, நிர்வாண நிலையில் ஓடிவந்து கோவில் குளத்தில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் தேஜஸ்வினியின் மரணம் குறித்த சிசிடிவி பின்னணி.
தெலங்கானா மாநிலத்தில், 25 வயது இளம்பெண் ஒருவர் நள்ளிரவில் ஆடைகளின்றி ஓடிவந்து கோவில் குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், இப்பெண்ணின் மரணம் குறித்த திடுக்கிடும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம் விழிநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி (25). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஐடி (IT) நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்த அவர், கடந்த 6 மாதங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேஜஸ்வினி தனது தாயாருடன் தெலங்கானாவின் பீரடிகுடா பகுதிக்கு வந்து, அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், மேடிபள்ளி டவுனில் உள்ள புகழ்பெற்ற பீரப்பா கோவில் குளத்தில் அதிகாலையில் இளம்பெண் ஒருவரின் உடல் ஆடைகளின்றி நிர்வாண நிலையில் மிதப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மேடிபள்ளி போலீஸார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கோவிலைச் சுற்றியுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
நள்ளிரவில் நடந்தது என்ன? - சிசிடிவி தகவல்கள்: போலீஸாரின் விரிவான விசாரணையில் நள்ளிரவில் நடந்த சம்பவங்கள் குறித்து மேடிபள்ளி போலீஸார் கூறியதாவது:
-
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேஜஸ்வினியும் அவரது தாயாரும் வழக்கம் போல் உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்றுள்ளனர்.
-
நள்ளிரவு 2.30 மணியளவில் திடீரெனக் கண்விழித்த தேஜஸ்வினி, தனது தாய் தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிப்புறமாகப் பூட்டியுள்ளார்.
-
பின்னர் வீட்டை விட்டு வெளியேறியவர், நள்ளிரவு 2.35 மணியளவில் ஆடைகளின்றி நிர்வாண நிலைக்கு மாறிச் சாலையில் ஓடியுள்ளார். அப்போது கையில் ஒரு சேலையை மட்டும் வைத்திருந்தார்.
-
நள்ளிரவு 2.45 மணிக்கு பீரப்பா கோவிலுக்குச் சென்ற அவர், கையில் சிலையோடு தீவிரமாக வேண்டிக்கொண்டிருந்தார்.
-
அதன் தொடர்ச்சியாக, அதிகாலை 3.00 மணியளவில் அங்கிருந்த கோவில் குளத்தில் குதித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மறுநாள் காலையில் கண்விழித்த தாய், அறை வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவைத் திறந்து மகளைத் தேடியுள்ளார். அப்போதுதான் குளத்தில் தேஜஸ்வினி சடலமாக மிதந்தது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம்: வேலையை இழந்தது முதற்கொண்டே தேஜஸ்வினி கடுமையான மன உளைச்சல் மற்றும் கடுமையான மன அழுத்தத்திற்கு (Depression) உள்ளாகியிருந்ததாகப் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவச் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். ஏதோ ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நினைத்து அவர் தொடர்ந்து பயந்து கொண்டே இருந்துள்ளார்.
அவர் வீட்டில் இருந்து வெளியேறியது முதல் குளத்தில் குதித்தது வரை அனைத்தும் சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளதாலும், வேறு நபர்களின் நடமாட்டம் அங்கு இல்லாததாலும், இது மன அழுத்தம் காரணமாகச் செய்யப்பட்ட தற்கொலைதான் என்பதைப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், மரணத்தில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளதா என்பதை அறியப் பிரேத பரிசோதனை அறிக்கைக்காகப் போலீஸார் காத்திருக்கின்றனர்.