தைவான் தலைநகர் தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தொடர் தாக்குதல்: 3 பேர் பலி, பாதுகாப்பு பலப்படுத்தல்
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபரை பிடிக்க முயன்றபோது, அவர் ஒரு கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பிரதமர் தெரிவித்தார்.
தைவான் தலைநகர் தைப்பேயில் உள்ள சுரங்க ரயில் (மெட்ரோ) நிலையங்களில் நடந்த தொடர் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தைவானியப் பிரதமர் Cho Jung-tai தெரிவித்தார்.
சந்தேக நபர் முதலில் ஒரு ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டுகள் மற்றும் புகைக் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு சுரங்க ரயில் நிலையத்திற்குச் சென்று கத்தியுடன் வழிப்போக்கர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சந்தேகநபரை பிடிக்க முயன்றபோது, அவர் ஒரு கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பிரதமர் தெரிவித்தார். அந்த நபருக்கு முன்பே குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களின் பின்னணியில், தைப்பே சுரங்க ரயில் நிலையங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. கூடுதல் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தைவானிய அதிபர் Lai Ching-te, இந்த சம்பவம் தொடர்பாக விரிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்துள்ளார். பொதுமக்கள் அமைதியை பேண வேண்டும் என்றும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Editorial Staff