சமையல் எரிவாயு விலை உயர்வால் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றக் குழு அறிவுறுத்தல்
சமையல் எரிவாயு விலை உயர்வால் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறும், எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் செயற்படுமாறு சுற்றாடல், விவசாயம் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கடந்த 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் குறித்த குழு கூடியபோதே இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் தனியார் நிறுவனமொன்று எரிவாயு சிலிண்டரின் விலையைக் கணிசமான அளவில் அதிகரித்தமை குறித்து விளக்கம் கோருவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரிகளும் இந்தக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர், சமையல் எரிவாயு விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமது அதிகாரசபைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிவாயு விலை உயர்வால் நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு குறித்த தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விலையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் தமக்குள்ள பங்கு குறைவாக இருப்பதால் அதிக விலைக்கு எரிவாயுவைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்கமைய கொள்வனவுச் செலவிற்கு ஏற்ப சிலிண்டரின் விலையை அதிகரிக்க நேரிட்டதாகவும் குறித்த நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக அதிகாரசபையின் தலைவர் குழுவிற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுப்பதை உறுதிப்படுத்துமாறும், விலை உயர்வால் நுகர்வோர் தொடர்ந்தும் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் துறைசார் மேற்பார்வைக் குழு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வலியுறுத்தியுள்ளது.