சிறைச்சாலையில் இம்ரான் கானுக்கு அச்சுறுத்தல்? மகன்கள் முன்வைத்த பாரதூரமான குற்றச்சாட்டுகள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக அவரது மகன்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஸ்தாபகருமான இம்ரான் கான், சிறைச்சாலையில் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக அவரது இரண்டு மகன்களும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே சுலைமான் ஈசா கான் மற்றும் காசிம் கான் ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். தமது தந்தைக்கு உடனடியாகவும் முறையாகவும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படாவிட்டால், அவர் சிறைச்சாலைக்குள்ளேயே உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இம்ரான் கான் நாளொன்றுக்கு 22 முதல் 23 மணித்தியாலங்கள் வரை தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநபர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் சுயாதீனமான மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கும் உள்ள வாய்ப்புகள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு மாற்றுமாறு ஓகஸ்ட் 18 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவரது மகன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தனக்கும் தனது மனைவி புஷ்ரா பீபிக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு கோரி இம்ரான் கான் பாகிஸ்தானின் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பகிரங்கக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அமைச்சரவை அமைச்சர் தாரிக் ஃபசல் சௌத்ரி, இம்ரான் கானுக்குத் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும் தேவையான வசதிகளும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்காக எட்டு சந்தர்ப்பங்களில் அவர் இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், இம்ரான் கான் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் பாகிஸ்தான் அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதற்கமைய, இம்ரான் கானின் சிறைச்சாலை நிலைமை மற்றும் அவருக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய நிலைமை உருவாகியுள்ளது.