திருமணம் முடிந்த மறுநாளே குழந்தையைப் பெற்றெடுத்த மணமகள்; பரபரப்பு சம்பவம்!
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் முடிந்த மறுநாளே மணமகள் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவத்தை அடுத்து, கர்ப்பத்தை மறைத்து மோசடி செய்ததாக மணப்பெண்ணின் குடும்பத்தார் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டத்தில் திருமணம் முடிந்த மறுநாளே மணமகள் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் மணமகன் குடும்பத்தாருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதிக்கும், அரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 15 ஆம் திகதி நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த நிலையில் மணமகள், மணமகனின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மணமகளின் வயிறு சற்றுப் பெரிதாக இருப்பதை அவதானித்த மணமகன் வீட்டார் அது குறித்துக் கேட்டபோது, தனது வயிற்றில் சில உபாதைகள் இருப்பதாகவும் அதற்காக மருந்துகளை உட்கொள்வதால் வயிறு வீங்கியிருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மறுநாள் காலை கழிவறைக்குச் சென்ற மணமகள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மணமகளை உடனடியாக நெல்லை அரச வைத்தியசாலையில் அனுமதித்த மணமகன் வீட்டார், இது தொடர்பில் நெல்லை பாளையங்கோட்டை தாலுகா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மணப்பெண்ணின் குடும்பத்தாரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இவ்விசாரணையில், திருமணத்திற்கு முன்னதாகவே மணப்பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில், அவ்விடயத்தை மறைத்து மணமகள் வீட்டார் வெங்கடேஷுக்குத் திருமணம் செய்து வைத்ததும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உண்மையை மறைத்துத் திருமணம் செய்தமை மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மணப்பெண்ணின் குடும்பத்தார் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.