மதுரை நகைக்கடை கொள்ளை விவகாரம்: காதலி மீனாட்சி குறித்து நிஷாந்த் வெளியிட்ட பரபரப்பு தகவல்
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான நிஷாந்த், இச்சம்பவத்திற்கும் தனது காதலி மீனாட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரை காளவாசல் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் நகைக்கடையில் கடந்த 12 ஆம் திகதி சுமார் 11.384 கிலோகிராம் எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான நிஷாந்த், தனது காதலி மீனாட்சி குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வாடிக்கையாளர் போன்று பல்வேறு மாறுவேடங்களில் நகைக்கடைக்குச் சென்று நிஷாந்த் நோட்டமிட்டுள்ளார். இதன் காரணமாகவே கொள்ளையடிக்கும்போது அதிக கற்கள் பதிக்கப்பட்ட நகைகளைத் தவிர்த்து, பெறுமதியான தங்கம் மற்றும் வைர நகைகளை மாத்திரம் அவர் திருடிச் சென்றுள்ளார். மாறுவேடத்தில் சென்றபோதிலும் கையில் குத்தியிருந்த பச்சை குத்தலை (Tattoo) மறைக்கத் தவறியதால், பேருந்து சாரதி ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டு நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவரது காதலி மீனாட்சி ஆகியோரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இதன்போது மாடக்குளம் பகுதியில் நிஷாந்த் பதுக்கி வைத்திருந்த நகைகளை மீனாட்சி பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களை டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸ் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிஷாந்த் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கும் மீனாட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த நீதிபதி, கொள்ளை வழக்கில் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து தற்போது பேசக்கூடாது எனவும், பொலிஸ் காவல் கோரும் மனு மீதான விசாரணை மாத்திரமே நடைபெறுவதாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
சந்தேகநபரைத் துன்புறுத்தக் கூடாது மற்றும் அவரது சட்டத்தரணியைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் பொலிஸாருக்கு ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. விசாரணைகளின் பின்னர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்காகப் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய நிஷாந்த், இந்தக் கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மீண்டும் தெரிவித்தார். உடனடியாக அருகிலிருந்த பொலிஸார் அவரைத் தொடர்ந்து பேசவிடாமல் தடுத்து வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர்.