அண்மைய இறுதிச்சடங்கு நிகழ்வும் பிறந்தநாள் கொண்டாட்டமும்: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்படுகிறாரா?
சமல் ராஜபக்சவின் பாரியார் சந்திரா ராஜபக்சவின் இறுதிக்கிரியையில் பிரதான அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளாமை மற்றும் மகிந்த ராஜபக்சவின் 81 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் குறித்து அரசியல் மட்டத்தில் வெளியாகியுள்ள தகவல்கள்.
அண்மையில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வொன்றின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவது வெளிப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்தின் மூத்த புதல்வரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் பாரியார் சந்திரா ராஜபக்சவின் இறுதிக் கிரியைகள் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றதுடன், அன்றைய தினமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 81 ஆவது பிறந்த தினமும் அமைந்திருந்தது.
மகிந்த ராஜபக்சவினால் மிகவும் மதிக்கப்படும் ஒருவராக சந்திரா ராஜபக்ச விளங்கியமையால், இம்முறை மகிந்த ராஜபக்சவின் பிறந்த தினம் எவ்வித ஆரவாரங்களுமின்றி மிகச் சாதாரணமான முறையில் கொண்டாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சந்திரா அம்மையாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் நாட்டின் பிரதான அரசியல் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஓரங்கட்டப்படுவதையே இது காட்டுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
இறுதிக்கிரியை நிகழ்வில் பிரதான அரசியல் தலைவர்கள் நேரில் பங்கேற்காத போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் தமது அனுதாபச் செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மகிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவண்ண உள்ளிட்ட சில அரசியல் பிரமுகர்கள் மாத்திரமே அங்கு வருகை தந்திருந்தனர்.
இதேவேளை, கடந்த நவம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 81 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் பங்கேற்க முடியாமல் போயுள்ளமை குறித்துக் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்காகத் தொடர்ச்சியாகப் பாராளுமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருந்தமையால், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கள் நாமல் ராஜபக்சவுக்குக் கிடைத்த போதிலும், தந்தையின் பிறந்தநாள் நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.