'கடினமான போராட்டங்களில் சிவாஜிலிங்கம் எப்போதும் ஒரு வழிகாட்டி'
விடுதலைப் போராட்டத்தின் தனது அனுபவங்களின் பாரம்பரியத்தை எமக்கு விட்டுவிட்டு அவர் பிரிந்து சென்றுள்ளார். சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வேண்டி எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்கப் போகும் கடினமான போராட்டங்களில், சிவாஜிலிங்கம் நமக்கு ஒரு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து சேவை செய்வார்.
தமிழர்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகளோடும் உழைக்கும் வர்க்க இயக்கங்களோடும் இணைந்து தொடர்ந்து செயற்பட்ட- வடக்கிலிருந்து வந்த ஒரு சிறந்த பிரதிநிதியாகவே எம்.கே. சிவாஜிலிங்கம் இருந்ததாக நவ சம சமாஜக் கட்சி (NSSP) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (USP) ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உலக வல்லரசுகளின் ஆதரவோடு "இரத்தமும் சதையுமாக" கொண்டு ஒடுக்க முற்பட்ட அரச வன்முறைக்கு எதிராக எப்போதுமே அவர் இத்தகைய பிரசாரங்களின் முன்னணியில் நின்று வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை
“தெற்கின் ஜனநாயக சக்திகள் முன்னெடுத்த இயக்கங்களில் வடக்கின் "உத்தியோகபூர்வ" பிரதிநிதியாக அவர் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு அர்த்தத்திலும் அவர் தமிழ் மக்களின் சுயவிருப்பின் பேரில் செயல்படும் முகவராக, இப்போராட்டங்களில் எங்களுடன் தொடர்ந்தும் இயங்கும் ஒருவராகவே இருந்தார். உண்மையில், தான் வடக்கிலிருந்து வந்தவர் என்பதை அவர் பெரிதும் முன்னிலைப்படுத்த முற்படவில்லை. மாறாக, இப்போராட்டங்களில் தான் ஒரு பரிபூரணமான பங்காளியாகத் தன்னை வெளிப்படுத்தவே விரும்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமானது, வடக்கின் சக்திகள் தெற்கின் ஜனநாயக இயக்கங்களுடன் கைகோர்ப்பதிலேயே தங்கியுள்ளது என்பதை அவர் எமக்கு உணர்த்த முயன்றார் என்றே நாங்கள் கருதுகிறோம்.
“உலக வல்லரசுகளின் ஆதரவோடு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இரத்த யாத்திரையில் மூழ்கடிக்கப்பட்டதன் பின்னர் எழுந்த மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி கொழும்பு நகரத்திலும், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளிலும் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போதும் அவர் எங்களுடன் தோளோடு தோள் நின்றார்.
“குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் கதி என்ன என்பது குறித்த பதில்களையும்; போரினால் வேரோடு பிடுங்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டிய அவசியத்தையும்; குடிசார் நிர்வாகத்தை மீள நிறுவுவதற்காக இராணுவ மயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியத்தையும்; பீரங்கித் தாக்குதல்களால் எதிர்காலக் கனவுகள் முற்றாகச் சிதைக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் துயரங்களுக்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டிய தேவையையும் நாங்கள் வலியுறுத்தினோம்.
“காவல்துறையினரும், சில வேளைகளில் இராணுவத்தினரின் சில பிரிவினரும் எம்மை "வெளியாட்கள்" எனக் முத்திரை குத்தி எமது போராட்டங்களைக் கலைக்க முற்பட்ட போதெல்லாம், சிவாஜிலிங்கம் ஒரு பெருமலை போன்று நிமிர்ந்து நின்று அரச அதிகாரிகளை எதிர்த்து நின்றதுடன், நாட்டின் எந்தப் பகுதியிலும் போராடும் அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாத்தார். அவ்வாறு செய்கையில், நிலவிய கொடூரமான அரச அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பது போன்றே ஏனைய சமூகங்களுக்கும் உண்டு என்பதை அவர் உறுதியாக எடுத்துரைத்தார். தெற்கு மக்கள் வடக்கிற்குச் சென்று போராடுவதற்கும், நிலைப்பாடு எடுப்பதற்கும், முழக்கங்களை எழுப்புவதற்கும், இத்தகைய அரச அடக்குமுறைக்கு எதிராகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கும் முழுமையான உரிமை உண்டு என, இந்த அரச இயந்திரத்தின் சூத்திரதாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்து, இந்த அரச இயந்திரத்தை எதிர்த்து நின்றதன் மூலம் சிவராசா முழு இலங்கைத் தேசத்திற்கும் ஒரு அழியாத பாரம்பரியமாக மாறியுள்ளார்.
“விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக எங்களுடன் இணைந்து செயற்பட அவர் தனது நேரத்தின் பெரும்பகுதியைத் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தார் என்பதில் ஐயமில்லை. அவரது தலைமைத்துவம் மிகவுக் கூடுதலாகத் தேவைப்பட்ட ஒரு வேளையில், கடுமையான மற்றும் குணப்படுத்த முடியாத நோயாக இயற்கையின் கொடூரமான விதிகளுக்கு அவர் பலியாகிவிட்டமை எமக்கு ஆழ்ந்த சோகத்தை அளிக்கிறது. மனிதனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவு இயற்கையின் விதிகளுடன் போராடுவதற்கு இன்னும் முழுமையானதாக மாறவில்லை என்பதை இது காட்டியது.
“இவ்வாறு, விடுதலைப் போராட்டத்தின் தனது அனுபவங்களின் பாரம்பரியத்தை எமக்கு விட்டுவிட்டு அவர் பிரிந்து சென்றுள்ளார். சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வேண்டி எதிர்காலத்தில் நாம் முகங்கொடுக்கப் போகும் கடினமான போராட்டங்களில், சிவாஜிலிங்கம் நமக்கு ஒரு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து சேவை செய்வார்.
தோழர் சிவாஜிலிங்கத்திற்கு எமது புரட்சிகரமான வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த விடுதலைப் போராட்டத்தை வடக்கின் மற்றும் தெற்கின் விடுதலை விரும்பும் ஜனநாயக சக்திகள் வெற்றிகரமாக இறுதிவரை கொண்டுசெல்ல வேண்டும் என்று வாழ்த்துவோம்.”