ஞானசார தேரரை மீண்டும் சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மிக முக்கிய உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அவருக்கு முன்னர் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையில் எஞ்சியுள்ள காலப்பகுதியை உடனடியாகச் சிறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளது.
முன்னதாக நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்வைக்கப்பட்ட சட்ட வாதங்கள் மற்றும் ஆவணங்களை முழுமையாக ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், அவருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனையைச் சிறைச்சாலைக்குள் முழுமையாக அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஞானசார தேரர் மீண்டும் எஞ்சிய காலப்பகுதிக்குச் சிறை வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.