தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: ஜந்தர் மந்தரில் 600 பேர் கைது, உச்சகட்ட பாதுகாப்பு
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காக்ரோச் ஜனதா கட்சியினர் 600 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக சிஜேபி கட்சி 'சலோ டெல்லி' பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், காவல்துறையின் தடையை மீறி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 600 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு, அனுமதியற்ற கூட்டங்களில் பங்கேற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லிக்குச் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய தளங்களுக்கு அருகில் ட்ரோன்கள் மூலம் வான்வழி கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிடையே, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி நோக்கிய விமானப் பயணக் கட்டணங்கள் பெருமளவு அதிகரித்தன. வாரணாசியில் இருந்து டெல்லி செல்வதற்கான ஸ்பாட் கட்டணம் ஒரு மாதத்திற்கு முந்தைய நிலையை விட 15 சதவீதம் உயர்ந்ததுடன், அமிர்தசரஸ் விமானக் கட்டணம் சுமார் 4,000 ரூபாய் வரையிலும், லூதியானா விமானக் கட்டணம் 4,301 ரூபாயில் இருந்து 12,987 ரூபாய் வரையிலும் கணிசமாக உயர்ந்தது.