கடத்தப்பட்ட பெண் கிணற்றில் உயிருடன் மீட்பு – ஆனால் அதே இடத்தில் மற்றொரு பெண் சடலம்! அதிர்ச்சி சம்பவம்!

Published on: 22 Mar 2026, 07:27 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மட்டக்களப்பில் கடத்தப்பட்ட பெண் ஒருவர் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கிணற்றில் மற்றொரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்ட பெண் கிணற்றில் உயிருடன் மீட்பு – ஆனால் அதே இடத்தில் மற்றொரு பெண் சடலம்! அதிர்ச்சி சம்பவம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பைச் சுட்டிக்காட்டும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பகுதியில் நேற்று கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் எல்லைக்குள் உள்ள நெல்லிக்காடு வயல் பகுதியில் அமைந்துள்ள பொதுக் கிணற்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இன்று காலை அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் கிணற்றிலிருந்து உதவி கோரும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, ஒரு பெண் கழுத்தளவு நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அந்தப் பெண்ணை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அவர் வழங்கிய ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், நேற்று தனது மகளுடன் சென்றபோது சிலர் தாக்கி கடத்தியதாகவும், பின்னர் தன்னை தாக்கி கிணற்றுக்குள் தள்ளியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அதே கிணற்றுக்குள் மற்றொரு பெண்ணின் சடலமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டதன் பேரில், பொலிஸார் மீண்டும் தேடுதல் மேற்கொண்டு ஒரு சடலத்தை மீட்டுள்ளனர். அந்த சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பகுதியில் காணாமல் போன பெண்ணுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் குறித்து நீதிமன்றம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அடையாளம் உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

 பல்வேறு பொலிஸ் பிரிவுகளில் காணாமல் போன பெண்கள் தொடர்பாக இந்த இடம் தொடர்பு இருக்கலாம் என்ற அச்சம் உள்ளூர் மக்களிடையே உருவாகியுள்ளது. முழுமையான விசாரணை முடிவுகளுக்குப் பிறகே உண்மை நிலை வெளிவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW