முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மரணம்: துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணை ஆரம்பம்
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், மரணம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்திற்கு சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர்
63 வயதான சி.டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றியவர். 1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், நீண்ட காலம் பொலிஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்து, பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அவர் உத்தியோகபூர்வமாக பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறவிருந்த நிலையில், புதிய பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவரது பதவிக்காலம் பல முறை நீடிக்கப்பட்டது.
இறுதியாக, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி சி.டி. விக்ரமரத்ன பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.