டி20 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி
2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (07) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கொட்லாந்து அணியை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், பிரண்டன் கிங் 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 19 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கொட்லாந்து பந்துவீச்சாளர்களை சவாலுக்கு உட்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவருக்கு துணையாக ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 13 பந்துகளில் 26 ஓட்டங்களையும், ரோவ்மேன் பவல் 14 பந்துகளில் 24 ஓட்டங்களையும் சேர்த்தனர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் பிராட் கியூரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் சபயான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஓலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது. அந்த அணியில் ரிச்சி பெரிங்டன் அதிகபட்சமாக 42 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியை வெற்றிகரமாக கைப்பற்றியது.
