நியூயோர்க்கில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழப்பு
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள், பாரிய வெடிப்புச் சத்தம் போன்ற ஓசையும் அதனைத் தொடர்ந்து அலறல் சத்தங்களும் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் மூன்று மாடிக் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில், ஆறு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட நியூயோர்க் நகர மேயர் ஸோரான் மம்தானி, உயிரிழந்தவர்களில் இருவர் கட்டுமானத் தொழிலாளர்கள் எனத் தெரிவித்ததுடன், இச்சம்பவத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள், பாரிய வெடிப்புச் சத்தம் போன்ற ஓசையும் அதனைத் தொடர்ந்து அலறல் சத்தங்களும் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தனது கர்ப்பிணி மனைவி மீட்கப்பட்டதை நபர் ஒருவர் நேரில் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நியூயோர்க் தீயணைப்புத் துறையின் துரித செயற்பாடுகளைப் பாராட்டிய மேயர் மம்தானி, கட்டடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் குறித்து விரிவான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள கட்டுமானத் தளம் குறித்தும், நகரிலுள்ள ஏனைய 100 கட்டுமானத் தளங்கள் குறித்தும் கட்டடங்கள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.