விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டை ஏவுதளக் கரங்கள் பிடித்து வரலாற்றுச் சாதனை
ஏவுதள கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட உலோகக் கரங்கள், தரையிறங்கிய உந்துகணையை நடுவானிலேயே பாதுகாப்பாகப் பிடித்து நிறுத்தின.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட ஸ்டார்ஷிப் விண்கலத்தின் 'சூப்பர் ஹெவி'உந்துகணை, விண்ணில் ஏவப்பட்ட பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்பி ஏவுதளத்தின் இயந்திரக் கரங்களால் வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நவம்பர் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை ஓட்டத்தின் போது, விண்ணில் சீறிப்பாய்ந்த ரொக்கெட்டின் கீழ்ப்பகுதி உந்துகணை, புவியீர்ப்பு விசையை எதிர்த்துத் தனது வேகத்தைக் கட்டுப்படுத்தியவாறு ஏவுதள கோபுரத்தை நோக்கித் துல்லியமாகத் தரையிறங்கியது.
ஏவுதள கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரமாண்ட உலோகக் கரங்கள், தரையிறங்கிய உந்துகணையை நடுவானிலேயே பாதுகாப்பாகப் பிடித்து நிறுத்தின. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இவ்வாறானதொரு தொழில்நுட்பம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழில்நுட்பத்தில் இதுவொரு பாரிய திருப்புமுனையாகக் கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கான விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் குறைக்கவும், பயணங்களை விரைவுபடுத்தவும் இந்தச் சாதனை பெரிதும் உதவும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.