கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் - பலி 164 ஆக உயர்வு; அதிபர் அவசரநிலை பிரகடனம்

Published on: 11 Aug 2026, 07:41 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கொலம்பியாவின் பகோடாவிற்கு மேற்கே 400 கி.மீ. தொலைவில் சோகோ அருகே 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் - பலி 164 ஆக உயர்வு; அதிபர் அவசரநிலை பிரகடனம்

கொலம்பியாவில் நேற்று (ஆகஸ்ட் 10) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தலைநகரான பகோடாவுக்கு மேற்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், சோகோ அருகே உள்ள சான் ஜோஸ் டெல்பால்மர் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது.

அமெரிக்க மற்றும் கொலம்பிய புவியியல் ஆய்வு மையங்கள் இதன் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவானதாகத் தெரிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் 107 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். உள்ளூர் அதிகாரிகள் நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேரம் செல்லச் செல்ல பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு மாகாணமான ரிசரால்டாவில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், சேதாரத்தின் முழு அளவு இன்னும் வெளிச்சத்திற்கு வராததால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் பல முக்கியமான கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மனிசலஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தேவாலய கோபுரம் இடிந்து விழுந்தது. காலி நகரில் 19 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அந்நகரின் மேயர் அலெஜான்ட்ரோ எடர் தெரிவித்தார். குய்ப்டோ நகரத்திலும் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அண்டை நாடான ஈகுவடாரிலும் உணரப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடினர்.

தற்போது இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புதிதாக பதவியேற்ற கொலம்பிய அதிபர் அபெலார்டோ டிலா எஸ்பிரியெல்லா, மீட்புப் பணிகளை நேரில் கண்காணிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், மீட்புப் பணிகளுக்கான நிதியை விரைவுபடுத்துவதற்காக அவசரநிலையையும் பிரகடனப்படுத்தியுள்ளார். மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

மேலும், ஆறு பிராந்திய விமான நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து, கொலம்பியாவின் சில பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த பெரும் நிலநடுக்கம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் கொலம்பியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை அறிவித்து வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW