ஜப்பானை தாக்கிய 'டால்பின்' புயல்: ஒகினவாவில் 5 பேர் காயம் - 14,000 வீடுகளுக்கு மின் துண்டிப்பு! சீனா நோக்கி நகரும் புயல்
ஜப்பானின் தெற்கு தீவுகளான ஒகினவா மற்றும் ககோஷிமா மாகாணத்தில் 'டால்பின்' சூறாவளி கடுமையாக தாக்கியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றில் 5 பேர் காயமடைந்தனர்.
ஜப்பானின் தெற்கு தீவுப்பகுதியான ஒகினவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை 'டால்பின்' (Dolphin) சூறாவளி கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த புயல் காரணமாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 5 பேர் காயமடைந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் தெற்கே அமைந்துள்ள ஒகினவா தீவு மற்றும் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட ஆமமி தீவு (Amami Islands) ஆகியவை இந்தப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், துறைமுகங்கள் மூடப்பட்டன; பள்ளிகள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புயல் வீசிய வேளையில் மணிக்கு 162 கிலோமீட்டர் (100 mph) வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது. சில சமயங்களில் காற்றின் வேகம் மணிக்கு 216 கிலோமீட்டர் (134 mph) வரை உயர்ந்ததாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது. இந்த பலத்த காற்றில் தவறி விழுந்ததில் 3 பேரும், மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 26-ஆம் தேதி பருவகால காற்றழுத்தம் (tropical depression) என்ற வகையில் உருவாகத் தொடங்கிய இது, ஜூலை 28-ஆம் தேதி வலுவான சூறாவளியாக மாறி 'டால்பின்' எனப் பெயரிடப்பட்டது.
தற்போது, இந்தப் புயல் சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன. இன்று (ஆகஸ்ட் 9) அந்நாட்டின் கிழக்கே உள்ள ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள கடற்கரையில் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன வானிலை ஆய்வு மையங்களும் இந்தப் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரவும், அவசர காலத் தயார்நிலைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.