ஆரோக்கியம் நிறைந்த பூண்டை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? முக்கிய மருத்துவ வழிகாட்டல்

சத்துக்கள் நிறைந்த பூண்டை இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகள் எடுப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்பவர்கள், அல்சர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த முக்கிய தகவல்கள்.


ஆரோக்கியம் நிறைந்த பூண்டை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? முக்கிய மருத்துவ வழிகாட்டல்

அன்றாடச் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, குறைந்த அளவில் வைட்டமின் ஈ மற்றும் கே ஆகியவற்றுடன் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துச் சளி மற்றும் தொற்றுக்களை எதிர்க்க உதவுவதுடன், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் செரிமானத்தை மேம்படுத்திக் குடல் நலனைப் பாதுகாக்கவும் துணைபுரிகின்றன.

இவ்வளவு மருத்துவக் குணங்கள் கொண்ட பூண்டை அதிகளவிலோ அல்லது பச்சையாகவோ உட்கொள்வதைச் சிலர் தவிர்ப்பது அவசியமாகும். குறிப்பாக, பூண்டு இயற்கையாகவே இரத்தத்தை மெலிதாக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால், வார்ஃபரின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் பூண்டைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது இரத்தக்கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். அதேபோன்று, அறுவை சிகிச்சைக்குத் தயாராகுபவர்களும் சத்திரசிகிச்சைக்கு முன்னதாக அதிக அளவில் பூண்டு உண்பதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

மேலும், வயிற்றுப் புண் (அல்சர்), நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பூண்டு உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாகப் பச்சைப் பூண்டு இத்தகைய பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தும் தன்மையுடையது. பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பண்பைக் கொண்டிருப்பதால், ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் (Low Blood Pressure) உள்ளவர்களும் பூண்டு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதேவேளை, பூண்டு சாப்பிடுவதால் தோல் அரிப்பு அல்லது சுவாசப் பிரச்சினைகள் போன்ற ஒவ்வாமை ஏற்படுபவர்கள் அதனைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தமது உணவில் பூண்டைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்னர் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். அத்துடன், பச்சைப் பூண்டை நேரடியாகச் சருமத்தில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அவ்வாறு தடவுவது சரும எரிச்சல் மற்றும் ரசாயனக் கொப்புளங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க