ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் ஏற்படும் முடி உடைதல், பொடுகுத் தொல்லை, உச்சந்தலை அரிப்பு மற்றும் சருமப் பாதிப்புகள் குறித்தும், அவற்றைத் தவிர்ப்பதற்கான ஆரோக்கிய வழிகாட்டல்களும் இதில் விளக்கப்பட்டுள்ளன.


ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

தலைமுடியைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தலைக்குக் குளிப்பது அவசியமானதாகும். எனினும், தலைக்குக் குளித்த பிறகோ அல்லது மழையில் நனைந்த பிறகோ தலைமுடியைச் சரியாக உலர்த்தாமல் ஈரத்துடனேயே தூங்குவது பலரும் செய்யும் தவறாகக் காணப்படுகிறது. ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைமுடி ஈரமாக இருக்கும்போது அதன் வலிமை குறைந்து எளிதில் உடையக்கூடிய தன்மையைப் பெறுகிறது. இந்நிலையில் தூங்கும்போது தலையணை உறையுடன் ஏற்படும் உராய்வு காரணமாக முடி உடைதல் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, நீளமான மற்றும் வறண்ட தலைமுடி கொண்டவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்துடன், ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது புரண்டு படுப்பதால் முடி பல்வேறு திசைகளில் வளைந்து சிக்கலாகி, காய்ந்த பின்னர் கலைந்த மற்றும் ஒழுங்கற்ற தோற்றத்தைப் பெறுவதால் காலையில் தலைமுடியைச் சீரமைப்பதும் சிரமமாக மாறுகிறது.

மேலும், ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் தலையணை உறையும் ஈரமாகிவிடுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஈரப்பதம் நீடித்து, தலையணை உறை முறையாகச் சுத்தம் செய்யப்படாவிட்டால் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவாகி உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. உச்சந்தலையில் நீண்ட நேரம் ஈரப்பதம் நீடிப்பது ஏற்கெனவே பொடுகுத் தொல்லை மற்றும் எண்ணெய்ப்பசை உள்ளவர்களுக்கு அசௌகரியத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

அதேபோன்று, தலைமுடியிலுள்ள எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகள் தலையணை உறையில் படிந்து, அதனை அடிக்கடி மாற்றாமல் பயன்படுத்தும்போது முகத்தின் சருமத்தைப் பாதித்து முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. குளிர்சாதன வசதி கொண்ட அறையில் ஈரமான தலைமுடியுடன் தூங்கும்போது தலையில் அதிகக் குளிர்ச்சி உணரப்படுவதால் சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன், மறைமுகமாகச் சளி மற்றும் தொண்டை வலி ஏற்படுவதற்கும் இது தாக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

எனவே, தலைக்குக் குளித்த பின்னர் தலைமுடியை மென்மையான துணியால் அழுத்தித் துடைத்து அதிகப்படியான நீரை அகற்றுவதுடன், தலைமுடியின் வேர்ப்பகுதி மற்றும் உச்சந்தலை நன்றாக உலர்ந்த பின்னரே தூங்கச் செல்ல வேண்டும். அத்துடன், தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க