திருமணமான பெண்ணுக்கும் பாதிரியாருக்கும் இடையிலான பழக்கம் குறித்து சர்ச்சை: தூத்துக்குடியில் 17 பேர் மீது வழக்குப் பதிவு
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணமான பெண்ணொருவருக்கும் பாதிரியார் ஒருவருக்கும் இடையில் பழக்கம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழகத்திலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் திருமணமான பெண்ணொருவருக்கும் கிறிஸ்தவ ஆலயப் பாதிரியார் ஒருவருக்கும் இடையில் பழக்கம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் தொடர்பில் 17 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டினத்தை அண்மித்த சிங்கித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த யூனோக் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற இவர்களது திருமணத்தைப் பாதிரியார் சிவாகர் நடத்தி வைத்துள்ளார்.
கடந்த மே மாதம் கப்பலில் பணிபுரிவதற்காக வெளிநாடு சென்ற யூனோக், கடந்த நவம்பர் 20ஆம் திகதி தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.
இதன்போது, தனது மனைவிக்கும் குறித்த பாதிரியாருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சிலர் யூனோக்கிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, யூனோக்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
பின்னர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலருடன் பாதிரியாரின் வீட்டிற்கு யூனோக் சென்றுள்ளார். எனினும், குறித்த வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள் வீட்டிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்த் தலைவர், யூனோக் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேருக்கு எதிராக ஆறுமுகநேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிரியாரின் வீட்டிலிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் யூனோக்கின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த அவரது பாட்டி மற்றும் சகோதரியை அவதூறாகப் பேசியதுடன், வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் யூனோக் ஆறுமுகநேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிங்கித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 12 பேர் அச்சுறுத்தல் விடுத்ததுடன் பொருட்களையும் சேதப்படுத்தியதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினரதும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மொத்தமாக 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், பாதிரியாரும் யூனோக்கின் மனைவியும் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் குரல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
எனினும், குறித்த குரல் பதிவின் உண்மைத்தன்மை மற்றும் இருவருக்கும் இடையிலான பழக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.