கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்! எல்லை மீறல் சர்ச்சைக்கு கூலி பட நடிகை ரச்சிதா ராம் கொடுத்த அதிரடி விளக்கம்
கூலி பட நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்! இணையத்தில் எழுந்த கடும் சர்ச்சைக்கு நடிகை அளித்த அதிரடி விளக்கம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'கூலி' திரைப்படத்தில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் தோன்றித் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் கன்னத்தைக் கிள்ளிய சம்பவம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
கன்னடத் திரையுலகில் 'புல்புல்' திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது உட்படப் பல விருதுகளை வென்று, உபேந்திராவுடன் 'ஐ லவ் யூ' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் ரச்சிதா ராம்.
அண்மையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் ரசிகர்கள் ஒன்றுதிரண்டு ஏற்பாடு செய்திருந்த சிறப்புச் சந்திப்பில் ரச்சிதா கலந்துகொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது வரிசையாக நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்களில் ஒருவர், எதிர்பாராத விதமாக நடிகையின் கன்னத்தைக் கிள்ளிச் சென்ற காணொளி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நெட்டிசன்கள் பலரும் அந்த ரசிகரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இவ்விவகாரம் பெரும் விவாதமாக உருவெடுத்த நிலையில், இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய நடிகை ரச்சிதா ராம், அந்தச் செயலில் தனக்கு எவ்வித தவறோ ஆபாசமோ தெரியவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். "எனது நண்பர்கள் பலரும் இதுகுறித்துக் கேட்டு கோபப்படவில்லையா என்றனர்; ஆனால், ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போலத் தூய்மையான அன்பின் வெளிப்பாடாகவே அந்த ரசிகர் அவ்வாறு செய்தார்.
அதில் எந்தவித தவறான உள்நோக்கமோ முறையற்ற தொடுதலோ இல்லை. எல்லை மீறிய நோக்கம் இருந்திருந்தால் நான் அங்கேயே கண்டித்திருப்பேன்; தூய்மையான அன்பை யாராலும் தடுக்க முடியாது, சொல்லப்போனால் அவர்களின் அந்த அன்பு எனக்குப் பிடித்திருந்தது" என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.