15 நாட்களில் 650 கோடி ரூபா வசூலை நெருங்கும் ‘ராமாயணா’; இந்திய சினிமாவில் புதிய சாதனை
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் 15 நாட்களில் 650 கோடி இந்திய ரூபா நிகர வசூலை நெருங்கியுள்ளதுடன், உலகளவில் 1,547 கோடி ரூபாவிற்கும் அதிகமான வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் திரையிடப்பட்டு 15 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய இந்தித் திரைப்பட வசூல் சாதனைகளில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதற்கமைய, இந்தி மொழித் திரைப்படமாக இந்திய ரூபாயில் 650 கோடி நிகர வசூல் எல்லையை மிக வேகமாக எட்டும் இரண்டாவது திரைப்படமாக ‘ராமாயணா’ உருவெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சாதனைப் பட்டியலில் ‘துரந்தர் 2’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. ‘ராமாயணா’ திரைப்படம் வெளியான 15 ஆவது நாளான நவம்பர் 19 ஆம் திகதி, இந்தியாவில் 21,437 காட்சிகள் மூலம் 19.35 கோடி இந்திய ரூபா நிகர வசூலைப் பெற்றுள்ளதாக சாக்னில்க் (Sacnilk) இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் இந்தி மொழியில் 17,661 காட்சிகள் மூலம் 14 கோடி ரூபா வசூலாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக கன்னட மொழியில் 1.40 கோடி ரூபாவும், தமிழ் மொழியில் 1.50 கோடி ரூபாவும், தெலுங்கு மொழியில் 70 இலட்சம் ரூபாவும், மலையாள மொழியில் 1.75 கோடி ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இத்திரைப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் 1,547.15 கோடி இந்திய ரூபாவாக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து மாத்திரம் 515 கோடி ரூபா வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் மொத்த வசூலாக 1,000 கோடி ரூபா எல்லையைக் கடந்துள்ள ‘ராமாயணா’, 14 நாட்களுக்குள் உலகளவில் 1,500 கோடி ரூபா வசூலைக் கடந்த மிக வேகமான இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
திரையிடப்பட்ட முதல் வாரத்தில் இந்தி நிகர வசூலாக 300 கோடி ரூபாவை ஈட்டி, ‘ஜவான்’ திரைப்படத்தின் சாதனையையும் இத்திரைப்படம் சமன் செய்துள்ளது. இரண்டாவது வாரத்தில் மாத்திரம் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகத் திரைப்பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் இரண்டாவது வாரத்தில் இவ்வாறானதொரு வசூலைப் பதிவு செய்த இரண்டாவது இந்தித் திரைப்படமாகவும் இது பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ‘யே பிரேம் மோல் லியா’ (Yeh Prem Mol Liya) மற்றும் ‘கன்மாஸ்டர் ஜி9’ (Gunmaaster G9) ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் ‘ராமாயணா’ புதிய போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 4,000 கோடி இந்திய ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இத்திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே மற்றும் லாரா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.