திருமண வாழ்க்கையில் ரொமான்ஸ் குறைய காரணம் என்ன? நிபுணர்கள் கூறும் முக்கிய காரணங்கள்
திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் போது ஆணும் பெண்ணும் பல கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். வாழ்க்கைத்துணை அழகாகவும், அன்பானவராகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக அமைய ரொமான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் காலப்போக்கில் பல தம்பதிகளின் வாழ்க்கையில் ரொமான்ஸ் குறைந்து சலிப்பு ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
திருமண உறவில் தகவல் தொடர்பு மிக முக்கியமானது. தம்பதிகள் தங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளாவிட்டால் தவறான புரிதல்கள் உருவாகும். இந்த தொடர்பு இல்லாமையே பல உறவுகளில் ரொமான்ஸ் குறைய முதன்மையான காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் வேலைப்பளு மற்றும் மன அழுத்தமும் திருமண வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய காரணமாக உள்ளது. பொறுப்புகள் அதிகரிக்கும் போது தம்பதிகள் ஒருவருக்கொருவர் செலவிடும் நேரம் குறைகிறது. இதனால் அன்பும் நெருக்கமும் மெதுவாக குறைய தொடங்குகிறது.
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் புதுமை இல்லாமல் ஒரே மாதிரியான நடைமுறை தொடர்வதும் ரொமான்ஸ் குறைவதற்கு காரணமாகிறது. தினசரி ஒரே செயல்களில் ஈடுபடுவது சலிப்பை ஏற்படுத்தி உறவில் ஆர்வத்தை குறைக்கிறது.
துணையிடம் இருந்து புறக்கணிப்பு ஏற்படும் போது உறவில் விரக்தி அதிகரிக்கிறது. ஒருவரின் முயற்சியை மற்றொருவர் மதிக்காத நிலை ஏற்பட்டால் அன்பு மெதுவாக குறையும். உறவில் ஒருவருக்கொருவர் பாராட்டும் மனப்பான்மை மிகவும் அவசியமானதாகும்.
எதிர்மறையான அணுகுமுறையும் திருமண உறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் நேர்மறையாகவும் நடந்துகொண்டால் மட்டுமே உறவில் அன்பு நிலைத்திருக்கும்.
உடல்ரீதியான நெருக்கமும் திருமண வாழ்க்கையில் முக்கியமானது. அன்பான தொடுதல், கட்டிப்பிடித்தல் போன்ற சிறிய அன்பு வெளிப்பாடுகள் உறவை வலுப்படுத்தும். இவை இல்லாமல் போனால் உறவில் தூரம் அதிகரிக்கலாம்.
மேலும் கடந்த கால பிரச்சினைகள் காரணமாக உருவாகும் வெறுப்புணர்வும் உறவை பாதிக்கும். பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக பேசி தீர்ப்பது திருமண வாழ்க்கையில் அன்பை நிலைநிறுத்த உதவும்.
