டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பதவியில் தொடர தயங்கும் அக்சர் படேல்
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் தொடர அக்சர் படேல் தயக்கம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2027ஆம் ஆண்டு தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியில் தலைமைத்துவப் பொறுப்பு தொடர்பாகப் புதிய குழப்பமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அணியின் தற்போதைய கேப்டனும், இந்திய அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரருமான (All-rounder) அக்சர் படேல், மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவதில் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில சீசன்களாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிரதான மற்றும் நம்பிக்கைக்குரிய வீரராக அக்சர் படேல் விளையாடி வருகிறார். துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் அவர் வழங்கி வரும் பங்களிப்பு காரணமாகவே கடந்த 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் தக்கவைக்கப்பட்டு, அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
எனினும், அடுத்த சீசனுக்கான கேப்டன் பொறுப்பைத் தொடர்வதில் அவர் தனிப்பட்ட ரீதியில் ஆர்வம் காட்டவில்லை என உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது இயல்பான ஆட்டத்தில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் அவர் இம்முடிவை எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மறுபுறம், அக்சர் படேலை கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் விரும்பவில்லை. தற்போதைய நிலையில் அவரே அணியை வழிநடத்தத் தகுதியானவர் என்பதால், அவரைத் தொடர்ந்து தலைவராக நீடிக்கச் செய்வதற்கான தீவிர முயற்சிகளில் நிர்வாகம் இறங்கியுள்ளது.
இது தொடர்பாக அக்சர் படேலுடன் டெல்லி அணி நிர்வாகத்தினர் மற்றும் ஆலோசகர்கள் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவரைச் சம்மதிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை அக்சர் படேல் தனது முடிவில் உறுதியாக இருந்து, கேப்டன் பொறுப்பை ஏற்க மறுக்கும் பட்சத்தில், டெல்லி அணிக்கு புதிய கேப்டன் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அவ்வாறு நேர்ந்தால், அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த ஏனைய வீரர்களான கே.எல்.ராகுல் போன்றோரில் ஒருவருக்கு இப்பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், அணியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வீரர்களின் அண்மைக்காலச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டே புதிய கேப்டன் குறித்த இறுதி முடிவை நிர்வாகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.