ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் புதிய சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அர்ஷ்தீப் சிங் தனது ஓட்டக் கணக்கை ஆரம்பித்தார்.


ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் புதிய சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் 11 ஆவது வரிசைத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 4 பந்துகளில் 14 ஓட்டங்களைக் குவித்து பல துடுப்பாட்ட சாதனைகளைச் சமன் செய்துள்ளார்.

பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஜேக்கப் டஃபியின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அர்ஷ்தீப் சிங் தனது ஓட்டக் கணக்கை ஆரம்பித்தார். தொடர்ந்து தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்திலும் மற்றொரு சிக்ஸரை விளாசிய அவர், 43 ஆவது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆவது வரிசையில் களமிறங்கி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இச்சாதனையைப் படைத்திருந்தனர். 

2000 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்தும், 2019 ஆம் ஆண்டு மொஹாலியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவும் முதல் பந்தில் சிக்ஸர் அடித்திருந்தனர்.

மேலும், இப்போட்டியில் இரண்டு சிக்ஸர்களை விளாசியதன் ஊடாக, ஒருநாள் போட்டியொன்றில் 11 ஆவது வரிசை இந்திய வீரரொருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையையும் அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். இதற்கு முன்னர் 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்தும், 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் மொஹமட் ஷமியும் தலா இரண்டு சிக்ஸர்களை அடித்திருந்தனர்.

சர்வதேச அளவில், ஒருநாள் போட்டியொன்றில் 11 ஆவது வரிசையில் களமிறங்கி ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக நான்கு சிக்ஸர்கள் அடித்த உலக சாதனையை பாகிஸ்தானின் மொஹமட் ஆமிர், நசீம் ஷா மற்றும் நியூசிலாந்தின் பிளேர் டிக்னர் ஆகியோர் கூட்டாகத் தம்வசம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க