கைப்புள்ளைக்கு கட்டம் சரியில்லை! – விஜயை எதிர்த்து வடிவேலுவா? மீண்டும் திமுக நெருக்கம்!
ஏறக்குறைய 10 ஆண்டுகள் சினிமாவில் ஒதுக்கப்பட்ட நிலையில் வடிவேலு இருந்தார். சில படங்களில் நடித்தாலும், முன்பைப் போல வெற்றி கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவின் காமெடி கிங் என அறியப்படுபவர் வடிவேலு. அரசியல் சார்பின்றி, தனது துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர். ரஜினி, அஜித், விஜய், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்களில் தனித்துவமான நகைச்சுவையைக் கொண்டு ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். "வைகைப்புயல்" என்ற பெயரில் அன்புடன் அழைக்கப்பட்டார்.
2011-ம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுகவின் அழைப்பை ஏற்று, வடிவேலு அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கும் விஜயகாந்துக்கும் சில பிரச்சினைகள் இருந்தது. அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, திமுகவுக்கு ஆதரவாகவும், விஜயகாந்த் மற்றும் அதிமுகவுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. மேலும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். இது வடிவேலுவுக்கு பெரும் அடியாக அமைந்தது. நேரடியாக எதிர்வினை இல்லாமல் இருந்தாலும், சினிமா நிறுவனங்கள் வடிவேலுவை நிராகரிக்கத் தொடங்கின.
அதன் பின்னர், ஏறக்குறைய 10 ஆண்டுகள் சினிமாவில் ஒதுக்கப்பட்ட நிலையில் வடிவேலு இருந்தார். சில படங்களில் நடித்தாலும், முன்பைப் போல வெற்றி கிடைக்கவில்லை.
அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், வடிவேலு மீண்டும் அரசியல் தளத்தில் செயல்பட ஆரம்பித்துள்ளார். குறிப்பாக 'மாமன்னன்' படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்தது, இந்த மீட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சமீபத்தில் உதயநிதியின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட வடிவேலு,
“எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. அவன்-இவன் சண்டை எங்களுக்கு சாதகம்! 2026-ல் முதல்வர் ஸ்டாலின் ஐயாதான்!” என தெளிவாக கூறினார்.
மேலும், “நானும் திமுகவில் ஓரமாக இருக்கிறேன். என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!” என்று திமுகவுடன் தனது உறவை வலுப்படுத்தினார்.
இப்போது, 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு மீண்டும் இறங்கப் போவதாகவும், அதில் விஜய் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக திமுக வடிவேலுவைத் தயார்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த நடவடிக்கை வடிவேலுவுக்கு பின்விளைவை ஏற்படுத்தலாம். இன்றைய 2K (2000s) தலைமுறை ரசிகர்கள் விஜயை மிகவும் ஆதரிக்கின்றனர். அவர்கள் வடிவேலுவின் இந்த நிலைப்பாட்டை ஆதரிக்காமல், கடும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
“வாங்கிய அடி பத்தலையா வடிவேலு அண்ணே!” என்று ரசிகர்கள் கேலி செய்யும் அளவுக்கு, அவர் மீதான பாசம் இன்றும் உள்ளது. ஆனால், அரசியல் தேர்வுகள் பொதுவாக ரசிகர் உணர்வுகளை சோதிக்கும் என்பதை வடிவேலு மறுபடியும் உணர நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Editorial Staff