ஒரு நாள் சேவையில் 4,000 கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்திற்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

May 21, 2025 - 11:27
ஒரு நாள் சேவையில் 4,000 கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்க  மொத்தம் 186 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால  செவ்வாய்க்கிழமை (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் அதனை குறிப்பிட்டார். 

முன்னர் ஒரு நாள் சேவையில் சுமார் 1,200 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் 4,000 கடவுச்சீட்டுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்திற்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. அதன்படி, எதிர்காலத்தில் புதிய அதிகாரிகள் திணைக்களத்தில் உள்வாங்கப்படுவார்கள்.

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக திணைக்களத்தின் தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது. கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறையில் உள்ள பிராந்திய அலுவலகங்களும் தற்போது அதிக எண்ணிக்கையிலான புதிய கடவுச்சீட்டுகளை வழங்குகின்றது.

மன்னார் அலுவலகத்தில் கடவுச்சீட்டு வழங்குவதும் 50இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மின்னணு-கடவுச்சீட்டு திட்டத்தை எதிர்காலத்தில் செயல்படுத்த தேவையான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாகவும் விஜேபால தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!