இலங்கையில் பிரித்தானிய பெண் போதைப் பொருளுடன் கைது
போதைப் பொருள் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால் குறித்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுக்கு துணை நிற்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த 21 வயதான சார்லோட் மே லீ, பெங்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பின்னர் திங்களன்று கொழும்பில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
46 கிலோ (101 பவுண்டுகள்) கஞ்சா வகை குஷ் அடங்கிய இரண்டு போதைப் பொருள் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால் குறித்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருப்பதுடன் தனது குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் குறித்த பெண் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லோட் மே லீ, TUI-யின் முன்னாள் கேபின் குழு உறுப்பினராக பணியாற்றிய நிலையில், பின்னர் அழகுக்கலை நிபுணராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.