நல்லூர் ஆலய வளாகத்தில் அசைவ உணவகம்; மாநகர சபை அதிரடி நடவடிக்கை

உணவகத்தை அகற்றுமாறு பிரதேச மக்களும் நல்லூர் கந்தன் அடியவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

May 22, 2025 - 13:35
நல்லூர் ஆலய வளாகத்தில் அசைவ உணவகம்; மாநகர சபை அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில், நல்லூர் கந்தன் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்ட நிலையில் உணவகத்தை அகற்றுமாறு பிரதேச மக்களும் நல்லூர் கந்தன் அடியவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக, நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று (22) மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!