வெப்பம் மற்றும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழப்பு
ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பெண் மற்றும் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார் .
அதேவேளை யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த ஆறுமுகம் யோகராசா (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இணுவில் பகுதியில் வீதியோரமாக உள்ள தோட்டக்காணி ஒன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதியவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மரண விசாரணையில் அதீத வெப்பம் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.