காதல் தோல்வியிலிருந்து முதலில் வெளிவருவது யார்? ஆண்களா, பெண்களா? அறிவியல் சொல்லும் உண்மை

Published on: 30 Jan 2026, 10:03 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

காதல் முறிவு என்பது ஒருவரின் மனதையும் உடலையும் ஆழமாகப் பாதிக்கக்கூடிய அனுபவமாகும். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும், அந்த வலியிலிருந்து மீண்டு வர ஒவ்வொருவரும் தங்கள் சொந்த போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

காதல் தோல்வியிலிருந்து முதலில் வெளிவருவது யார்? ஆண்களா, பெண்களா? அறிவியல் சொல்லும் உண்மை

காதல் வாழ்க்கைதான் பலருக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் எல்லா காதல்களும் திருமணமாக முடிவடைவதில்லை. சில உறவுகள் பிரிவிலும், தோல்வியிலும் முடிவடைகின்றன. காதல் முறிவு என்பது ஒருவரின் மனதையும் உடலையும் ஆழமாகப் பாதிக்கக்கூடிய அனுபவமாகும். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும், அந்த வலியிலிருந்து மீண்டு வர ஒவ்வொருவரும் தங்கள் சொந்த போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

காதல் முறிவுக்குப் பிறகு மீள எடுக்கும் காலம் நபருக்கு நபர் மாறுபட்டாலும், ஆண் மற்றும் பெண் இருவரும் அந்த அனுபவத்தை வெவ்வேறு விதமாக எதிர்கொள்கிறார்கள் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், ‘எவல்யூஷனரி பிஹேவியரல் சயின்சஸ்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் 96 நாடுகளைச் சேர்ந்த 5,705 பேரிடம் நேர்காணல் நடத்தினர். காதல் முறிவின்போது அவர்கள் அனுபவித்த உணர்ச்சி வலியும் உடல் வலியும் ஒன்றிலிருந்து பத்து வரை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள், காதல் முறிவு பெண்களை அதிகமாக பாதிப்பதாகக் கூறுகின்றன. பெண்கள் தங்களின் உணர்ச்சி வேதனையை சராசரியாக 6.84 என மதிப்பிட்டனர். அதே நேரத்தில் ஆண்கள் 6.58 என்ற அளவில் மதிப்பிட்டனர். உடல் வலியைப் பொருத்தவரை, பெண்கள் 4.21 எனவும், ஆண்கள் 3.75 எனவும் தெரிவித்தனர். இதனால், முறிவு நேரத்தில் பெண்கள் உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக அதிக வலியை அனுபவிப்பது தெளிவாகிறது.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான திருப்பம் உள்ளது. ஆரம்பத்தில் அதிகம் பாதிக்கப்படுகிற பெண்களே, அந்த அனுபவத்திலிருந்து விரைவாகவும் முழுமையாகவும் மீண்டு, மனதளவில் மேலும் வலிமையானவர்களாக வெளிவருகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும், அந்த உறவில் நடந்தவற்றை புரிந்து கொள்ளவும், தங்களை வளர்த்துக்கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள்.

ஆண்களின் அணுகுமுறை இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. சில ஆண்கள் பிரிவு தங்களை பாதிக்கவே இல்லை என்று வெளிப்படையாகக் காட்ட முயலலாம். சிலர் மதுபானம், போதைப்பொருள் பழக்கம் அல்லது தங்களைத் திசைதிருப்பும் பழக்கங்களில் ஈடுபடலாம். இதனால், அவர்கள் அந்த அனுபவத்திலிருந்து தனிப்பட்ட வளர்ச்சி அல்லது சுய உணர்வு பெறும் வாய்ப்பு குறைவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆண்கள் காதல் முறிவு நேரத்தில் பெண்களைப் போல அதிக வலியை உடனடியாக உணராதிருந்தாலும், அந்த இழப்பை உணர தொடங்கும்போது அவர்கள் மீண்டு வர அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆய்வின் போது, ஒரு வருடத்திற்கும் மேலாகப் பிரிந்திருந்த பல ஆண்கள் இன்னும் “Post Relationship Grief” என்ற மனநிலையால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

பரிணாம வளர்ச்சியின் காரணமாக, பெண்களின் கவனத்திற்காகப் போட்டியிடும் மனநிலை ஆண்களிடம் உருவாகியுள்ளது. அதனால், ஒரு துணையை இழப்பது ஆரம்பத்தில் பெரிய வலியாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் மீண்டும் புதிய உறவை உருவாக்க வேண்டிய நிலையை உணரும்போது, அந்த இழப்பு அவர்களை ஆழமாகவும் நீண்ட காலத்திற்கும் பாதிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது என்ற உண்மை புரியும் போது, மன வேதனை மேலும் அதிகரிக்கிறது என்றும் இந்த ஆய்வின் தலைவர் விளக்குகிறார்.

மொத்தத்தில், காதல் முறிவு பெண்களுக்கு அதிக வலியைக் கொடுத்தாலும், அவர்கள் அதிலிருந்து விரைவாக மீண்டு வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். ஆண்கள் வெளிப்படையாக வலியை காட்டாமல் இருந்தாலும், அந்த அனுபவம் அவர்களை நீண்ட காலம் உள்ளுக்குள் பாதித்துக் கொண்டே இருக்கிறது என்பதே இந்த ஆய்வு சொல்லும் முக்கியமான உண்மை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW