3 முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு.. நம்பவைத்து ஏமாற்றி விட்டார்.. அதிமுக முன்னாள் அமைச்சரால் கதறும் நடிகை சாந்தினி
'நாடோடிகள்' பட நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
'நாடோடிகள்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பலத்த புகார்களை முன்வைத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் தன்னை மூன்று முறை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சாந்தினி புகார் அளித்தார். அதில், மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தான் இணங்கியதாகவும், ஆனால் அவர் தற்போது அதற்கு மறுப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை (376), பெண்ணின் அனுமதியின்றி கருவை கலைத்தல் (313), நம்பிக்கை மோசடி (417), கொலை மிரட்டல் (506) உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் தலைமறைவாக இருந்த மணிகண்டனை பெங்களூரில் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகை சாந்தினி செய்தியாளர்களை சந்தித்து பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், 2021-ம் ஆண்டு மணிகண்டன் தனது ஆட்களை வைத்து தனது வீட்டில் பெட்ரோல் பாம் வீசியதாகவும், அதன்பின் தி.நகர் முன்னாள் கவுன்சிலர் ராமநாதன் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
"அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்கப் போகிறார்கள். தன்னுடைய வாழ்வாதாரத்தை கவனித்து கொள்வதாகவும் சொத்துக்கள் தருவதாகவும் கூறி வழக்கை வாபஸ் பெற செய்தார்" என்று சாந்தினி கூறினார்.
ஆனால், வழக்கை வாபஸ் பெற்ற இரண்டே நாட்களில் மணிகண்டனின் அனைத்து தொலைபேசிகளும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் மாநில மகளிர் ஆணையத்தில் சாந்தினி புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
மகளிர் ஆணையம் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, அவரது வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அலுவலகத்திற்குள் நுழைந்து அதிகாரிகளை மிரட்டியதாக சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்.
"மணிகண்டனின் வழக்கறிஞர்கள் மகளிர் ஆணைய அதிகாரியையே மிரட்டுகிறார்கள். நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடியால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர்களையும் விலைக்கு வாங்கி விடுகிறார். அதனால் நானே நேரடியாக ஆஜராகியுள்ளேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த மோசடியால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கான மருத்துவச் சான்றிதழ்களையும் சாந்தினி மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.