- Advertisement -
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மிக மோசமாக உள்ளது கேரள மாநிலத்தின் நிலைமை.
ஏராளமான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.. பெரும்பாலான சாலைகளில்வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் நடக்க உள்ள திருமணங்களையும் தடபுடலாக நடத்த முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு மணமக்கள் புதுவழியை தேர்ந்தெடுத்து, திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.
இந்த மணமக்கள் இருவருமே செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெயர் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா. இவர்களுக்குதான் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதற்காக தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். அந்த நேரம் பார்த்துதான் எதிர்பாராமல் இப்படி ஒரு வெள்ளம் வந்துவிட்டது..
திருமணம் நடக்க உள்ள கோயிலுக்கு 2 நாட்களுக்கு முன்புகூட வந்துள்ளனர். அந்த அளவுக்கு அங்கு தண்ணீர் சூழப்படவில்லை. ஆனால், இந்த 2 நாளில் மழை அதிக அளவு பெய்ததால், அந்த பகுதி முழுவதுமே மழை தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால், மண்டபத்திற்கு மணமக்கள் உட்பட குடும்பத்தினர் யாராலுமே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எக்காரணம் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய அண்டாவில் மணமக்கள் ஏறி உட்கார்ந்து கொண்டனர். நீரில் மிதந்தபடியே அந்த பாத்திரத்தில் சென்றதையடுத்து, திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இறுதியில் திருமணம் திட்டமிட்டபடியே எளிமையாக நடந்து முடிந்தது. ஏற்கனவே தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே திருமணத்துக்கு உறவினர்களை அழைத்திருந்தனராம்.
இப்போது மழை என்பதால் மேலும் குறைவான அளவிலேயே நபர்கள் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்தபோது, இதேபோலதான் ஒரு பாட்டி உட்பட நிறைய பேரை அண்டாவை வைத்துதான் காப்பாற்றினார்கள்.. அதேபோல டெக்னிக்கை மணமக்கள் இன்றைய தினம் செய்துள்ளனர்..