வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களால் இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கப்படும் கணக்குகள் என்.ஆர்.ஐ. வங்கி கணக்கு என்று அழைக்கப்படுகிறது. தனியார் வங்கிகளில் ஒன்றான எச்.டி.எப்.சி. வங்கியிலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.
அண்மைய நாட்களில் செயல்படாமல் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டு இருந்த ஒரு என்.ஆர்.ஐ. வங்கி கணக்கில் இருந்து இன்டர்நெட் பேங்கிங் மற்றும் போலி காசோலைகள் மூலம் பணத்தை எடுக்கும் முயற்சி நடப்பதாக வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சைபர் பிரிவு பொலிஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது அமெரிக்க போன் நம்பர் ஒன்றை, அந்த வங்கி கணக்குடன் இணைக்கும் முயற்சியில் குற்றவாளிகள் முயன்றிருப்பது தெரியவந்தது. 66 முறை இந்த முயற்சி நடந்திருப்பதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கிடைத்த சான்றுகளின அடிப்படையில் டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 20 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தினர். அப்போது எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள் சிலரே போலி செக் புத்தகம் வழங்கியது, கணக்குடன் தொடர்புடைய போன் நம்பரை மாற்ற உதவி செய்தது, முடக்கப்பட்ட கணக்கை திறக்க உதவி செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில், எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர்கள் 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு செயலற்று இருப்பதும், அதில் நிறைய பணம் இருப்பதையும் தெரிந்து கொண்ட குற்றவாளிகள், அந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதானவர்களில் பெண் அதிகாரி ஒருவரும் அடங்குவார். செக் புத்தகம் வழங்குவதற்காகவும், செயலற்ற கணக்கை திறந்துவிடுவதற்காகவும் அவருக்கு ரூ.10 லட்சம் தருவதாக குற்றவாளிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.