டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து. இவர் திடீரென கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தலைநகரான டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதக்கணக்கில் போராடிய விவசாயிகள் குறித்த செய்தி உலகமெங்கும் பேசுபொருளாக மாறியது. இந்தியாவிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் குரல் கொடுத்தனர்.
இந்தப்போராட்டத்தின் டிராக்டர் பேரணியில் வெடித்த கலவரத்தில், செங்கோட்டையில் விவசாயிகள் கொடி ஏற்றப்பட்டது. இதனை ஏற்றியவர் பஞ்சாபி நடிகர் தீப் சிங் சித்து என்றும் இவர்தான் ஒரு பகுதி விவசாயிகளைத் தூண்டி கலவரம் ஏற்பட காரணமாக இருந்தார் என்றும் அப்போது குற்றம் சாட்டப்பட்டு தீப் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு 9:30 மணியளவில் சித்து டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் சென்ற கார் டிரெய்லர் டிரக் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டு உயிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் அவருடன் பயணித்த பெண் ஒருவரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தீவிர ஈடுபாடு காட்டிய தீப் சிங், செங்கோட்டையில் கொடி ஏற்றிய வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதுடன், ”சீக்கிய மதத்தின் குருக்களில் ஒருவரான நிஷான் சாஹேபின் கொடியை ஏற்றினேனே தவிர, அருகிலிருந்த நம் தேசியக் கொடியை நான் அகற்றவில்லை” என்றும் குறிப்பிட்டுருந்தார்.
இது தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமினில் வெளியேவந்த நிலையில் தான் தற்போது கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் தீப் சிங் சித்து.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.