ஹட்டன் காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக பாடசாலையில் அதிபர் ஜேம்ஸ் விக்டர் தெரிவித்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் 13வகுப்பு வரை சுமார் 358 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில் 40 ஆசிரியர்கள் உள்ளனர்.
முன்னதாக, பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய பெரிய மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன என்றும், இரண்டு மரங்களை வெட்டுமாறு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்காததாலும், கடந்த சில நாட்களாக நிலவிய பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீது விழுந்தன என்றும் அதிபர் கூறினார்.
மத்திய மாகாண கல்வி அமைச்சு மற்றும் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளரின் முறையான அனுமதியுடன், பாடசாலை மூடப்படும் என்றும், பாடசாலை கட்டிடங்களின் மீது இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இரண்டு பெரிய மரங்களும் (03) நாட்களில் அகற்றப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.