அனுமதிப்பத்திரம் இல்லாது, பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தெடர்ந்த வண்ணம் உள்ளன.
அவ்வாறே, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு அனுமதிப்பத்திரம் இல்லாது சென்ற பஸ்களை சிலர் இடைமறித்த காரணத்தால், மட்டக்களப்பு – கல்லடியில் நேற்றிரவு (26) சில மணி நேரம் பதட்டம் ஏற்பட்டது.
வீதி போக்குவரத்து அதிகார சபையின் அனுமதிப்பத்திரம் உள்ள பஸ் உரிமையாளர்களே, அனுமதிப் பத்திரம் இல்லாமல் இயங்கும் சில பஸ்களை வழிமறித்தமையல் இந்த பதட்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார், அனுமதிப்பத்திரம் இன்றிப் பயணித்த மூன்று பஸ்களுக்கு சட்ட நடவடிக்கையை எடுத்து, அந்த பஸ்களை காத்தான்குடிக்குத் திருப்பி அனுப்பினர்.
எனினும், பொலிஸாருக்கு தண்ணி காட்டி குறித்த பஸ்கள் மீண்டும் கொழும்பு நோக்கிச் சென்றுள்ளன.
வீதிப் போக்குவரத்து அதிகார சபையால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் இல்லாத அதிகளவான பஸ்கள், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சேவையில் ஈடுபடுவதால் அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களுக்கு இடையில் தொடரும் இந்த முரண்பாடு காரணமாக பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கான சரியான நடவடிக்கையை வீதிப் போக்குவரத்து பிராந்திய காரியாலயம் முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் நலன் கருதி, குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வீதிப் போக்குவரத்து பிராந்திய முகாமையாளர் ஒரு நிரந்தர தீர்வை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.